வெண்ணிலா கப் கேக்

தேவையானவை:

மைதா மாவு -முக்கால் கப்

பேக்கிங் பவுடர் -முக்கால் டீஸ்பூன்

வெண்ணெய் -தேவைக்கு

சர்க்கரை -அரை கப்

முட்டை -2

வெண்ணிலா எசன்ஸ் -சிறிதளவு

பால் -அரை கப்

உப்பு -சிறிதளவு

செய்முறை:

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், உப்பை சேர்த்து தனியாக சலித்துக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரையை கொட்டி கலக்கவும்.

அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கட்டிப் பிடிக்காமல் அடித்துக்கொள்ளவும். பின்னர் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்.

இந்த கலவையுடன் பாதி மாவு கலவையை கொட்டி நன்றாக கலக்கவும். பின்னர் பாலையும், மீதமுள்ள மாவையும் ஒன்று சேர்த்து கேக் மாவு பதத்துக்கு தயார் செய்து கொள்ளவும்.

அந்த மாவு கலவையை சிறு சிறு கப்களில் ஊற்றி மைக்ரோ ஓவனில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அரை மணி நேரம் வேக வைத்து எடுத்து சுவைக்கலாம்.

இனிப்பு ரவா பணியாரம்

தேவையானவை:

ரவை - அரை கப்

மைதா - அரை கப்

சர்க்கரை - முக்கால் கப்

வாழைப்பழம் - 1

தேங்காய் துருவல் - கால் கப்

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

தண்ணீரில் ரவையை மூன்று மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் சர்க்கரை, மைதா, தேங்காய் துருவல், வாழைப்பழத்தை போட்டு பிசைந்து கொள்ளவும்.

சர்க்கரை நன்கு கரைந்து கட்டிப்பிடிக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு இருபுறமும் திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும். ருசியான ரவா பணியாரம் தயார்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு உருண்டை

தேவையானவை:

சர்க்கரைவள்ளிக்

கிழங்கு - அரை கிலோ

தேங்காய் துருவல் - அரை கப்

பொடித்த வெல்லம் - 200 கிராம்

முந்திரி பருப்பு - 5 (பொடிக்கவும்)

மில்க்மெய்டு - 2 டீஸ்பூன்

செய்முறை:

வாணலியில் தேங்காய் துருவலை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலை சீவி இட்லி தட்டில் வேகவைத்து துருவிக்கொள்ளவும்.

அதனுடன் வெல்லம், முந்திரி பருப்பு, மில்க்மெய்டு ஆகியவற்றை கலந்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

அதனை தேங்காய் துருவலில் புரட்டி சுவைக்கலாம்.